தேய்பிறை அஷ்டமி என்றழைக்கப்படும் "காலபைரவாஷ்டமி" தினத்தன்று காலபைரவரை வழிபட்டால் சனி தோஷம் உட்பட எல்லா தோஷங்களும் நீங்கி, கஷ்டத்திலிருந்து விடுபட்டு சகல செளபாக்கியமும் பெறுவர் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.இதனால் இந்த விஷேசமான தேய்பிறை அஷ்டமி தினத்தன்று மக்கள் தங்கள் அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று காலபைரவரை வழிபடுவது வழக்கம். இதனை முன்னிட்டு ஆனி மாத தேய்பிறை அஷ்டமி தினமான இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவர் சன்னதியில் பைரவருக்கு பால், தயிர், சந்தனம், சீயக்காய், இளநீர், பச்சரிசி, தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூ, வில்வ இலை, வடை உள்ளிட்டவைகளைக் கொண்டு மாலை சாற்றி, காலபைரவருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது.இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கால பைரவர் சன்னதியில் தங்கள் பெயர்களை கூறி அர்ச்சனை செய்தும், விளக்கேற்றியும் வழிபட்டனர். பின்னர் இறுதியில் கோவிலுக்கு பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில், பஞ்சாமிர்தம் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.