உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று (02.06.2023) நிறைவடைந்த நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் "ரதக்காவடி" சுமந்த படி பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்....


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழாவும் ஒன்றாக உள்ளது. முருகப்பெருமான் அவதரித்த வைகாசி மாதம் விசாக நட்சத்திர நன்நாளில் சாமியை தரிசனம் செய்வது சிறப்பு என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து பாதயாத்திரையாக வந்து பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.


அந்த வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மேள வாத்தியங்கலுடன் "ரதக்காவடி" சுமந்தபடி பாதயாத்திரையாக வந்தனர். கோவில் வளாகத்தில் வைத்து பக்தர்கள் அனைவரும் மேள வாத்திய இசை கலைஞர்களின் இசைக்கு ஏற்ப சுமார் 50 கிலோ எடை கொண்ட ரத காவடியை தோளில் சுமந்தபடி நடனம் ஆடி, கிரி பிரகாரம் சுற்றி வந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.