தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம், அபாயகரமான கழிவுகள் அகற்றும் பணி தொடக்கம்?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம், அபாயகரமான கழிவுகள் ஆகியவற்றை அகற்றுவது, ஆலையில் உள்ள பசுமை வளையம் பராமரிப்பு உள்ளிட்ட 4 விதமான பணிகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற ஆணைப்படி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆலை பராமரிப்பு பணிகள் தொடர்பாக சார் ஆட்சியர் கெüரவ் குமார் தலைமையிலான 9 பேர் கொண்ட மேலாண்மை குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவினர், ஆலைக் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 7ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, ஜிப்சம் மற்றும் அபாயகரமான கழிவுகள் எவ்வளவு உள்ளன என்பதையும், அவற்றை அகற்றுவதற்கு எவ்வளவு நாள்கள் ஆகும் என்பது குறித்தும், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும்பணி நடைபெற்று வருகிறது. இந்த கேமிராக்கள் அனைத்தும் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்படுகிற கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், விரைவில் ஆலைக் கழிவுகள் அகற்றும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.