இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தியடிகள் தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியபோது  தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே கடலையூரைச் சேர்ந்த வெயிலுகந்த முதலியார் தலைமையில் 34 நெசவாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தில் ஆங்கிலேயர் துப்பாக்கிச் சூட்டிற்கு சங்கலிங்க முதலியார் என்பவர் உயிரிழந்தார். மற்றவர்கள் காயம் அடைந்தனர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் நினைவாக கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி முன்பு 2008-ம் ஆண்டு பொதுமக்கள் சார்பில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ல் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 81-வது ஆண்டு  நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. வெள்ளையேறு வெளியேறு இயக்க போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் நினைவாக அமைக்கப்பட்ட ஸ்தூபியில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு வடக்கு மாவட்டச் செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர். இதில், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில் பாஜக கட்சியினர் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.