நாட்டின் விடுதலைக்கு தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய எட்டையாபுரத்து முண்டாசு கவிஞன் மகாகவி பாரதியின் 102வது நினைவு தினம் அவர் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் கடைபிடிக்கப்பட்டது. தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி, மாரியப்ப நாடார் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 70-க்கும் மேற்பட்டோர் பாரதியின் வேடம்புனைந்து பாரதியார் மணி மண்டபம் மற்றும் பாரதி இல்லத்தில் உள்ள பாரதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பாரதியின் புகழை பரப்பிடவும், அனைவருக்கும் உயர் கல்வி கிடைத்திடவும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை, சமவாய்ப்பு கிடைத்திடவும், நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்பு பாரதியின் பாடல்களைப் பாடி கோஷங்களை எழுப்பி பாரதி இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பாரதி வேடம் அணிந்த இளம் பாரதிகளுக்கு ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் டயனா ஜெயந்தி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் லால்பகதூர்கென்னடி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, வேல்முருகன், நடராஜன், உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
எட்டயபுரத்தில் அணிவகுத்த இளம் பாரதிகள்!
Admin
1 நிமிட வாசிப்பு