தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சமையலர் முனிய செல்வி சமைத்த காரணத்தினால் அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, காலை உணவு திட்டத்தில் தங்களது குழந்தைகளை சாப்பிட அனுமதிக்கவில்லை..இது குறித்த தகவல்கள் கிடைத்ததும் வருவாய் துறை, ஊராட்சி துறை, காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியும் பெற்றோர்கள் ஏற்க மறுத்தனர்.இது குறித்த செய்தி  ஒளிபரப்பான நிலையில் தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மேலும் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இந்நிலையில் அந்த பள்ளிக்கு இன்று கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,, விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஆகியோர் வந்து மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். இதையடுத்து அனைவரும் குழந்தைகளுக்கு  உணவினை பறிமாறி தொடர்ந்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார். மேலும் அக்கிராம மக்களுடன் பேசினார். இனி இது போன்ற சம்பவங்கள் தங்கள் கிராமத்தில் நடைபெறாது என்று தெரிவித்தனர். அப்பகுதி பொதுமக்கள் இது பற்றி கூறுகையில் தனிப்பட்ட சில நபர்களின் பிரச்சனை பெரிதாகிவிட்டது என்றும் தங்களுக்குள் எவ்வித வேறுபாடுகளும் இல்லை இனி இது போன்ற பிரச்சனைகள் இந்த கிராமத்தில் எழாது என்றனர்.