விளாத்திகுளம் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்! 


முறையான குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து : விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்திய கிராம மக்கள் !


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பூசனூர் கிராமம் உள்ளது. இப்பகுதி பொதுமக்களுக்கு விளாத்திகுளம் வைப்பார் ஆற்றுப் பகுதியில் போர்வெல் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்பதை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் முன்பு அமர்ந்து முறையான குடிநீர் வழங்க வலியுறுத்தி மனு வழங்கிய போராட்டம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.


மனுவில்,எங்கள் பூசனூர் கிராமத்தில் கடந்த 4 மாதங்களாக குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகிறோம். பூசனூர் கிராமத்திற்கு மொத்தம் 5 குடிநீர் டேங்க் உள்ளது. அதில் 4 டேங்கில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் பெற்று தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.