15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !




குடிநீர் தேவைக்காக “ கால் கடுக்க ” கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்தே செல்லும் கிராம மக்கள்!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம் அருகே உள்ள குமாரட்டியாபுரம் கிராமம், இந்தக் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர், இந்தகிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது, இந்தகுடிநீர் பிரச்சினையை சரி செய்யக்கோரி அக்கிரம மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்,தமிழகமுதல்வர், மாவட்ட ஆட்சியர் என மக்கள் பிரதிநிதிகளில் இருந்து அரசு அதிகாரிகள் வரை பலமுறை புகார் அளித்தும், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை குடிநீர் பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணவில்லை என்று அக்கிராம மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.



அதையும் மீறி குடிநீர் பிரச்சனைக்காக சாலை மறியல் போராட்டம், தேர்தல் புறக்கணிப்பு, சுதந்திர தின விழா புறக்கணிப்பு என போராட்டங்கள் அறிவித்தால், உடனடியாக வட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு குடிநீர் வழங்கப்படும் என்று கூறுகின்றனர், அவ்வாறு வழங்கப்படும் குடிநீரும் இரண்டு அல்லது மூன்று நாள் மட்டுமே வந்ததாகவும், திரும்பவும் நாங்கள் தண்ணீருக்காக அரும்பாடுபட்டு வருகிறோம் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



பல ஆண்டுகளாக கிராமத்தில் உள்ள கண்மாயையும்,கிணற்றையும்  கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கண்மாயை தூர்வாராத காரணத்தினால் மோட்டார் போரில் வரும் தண்ணீர் உப்பு சுவையுடனும், துவப்பு சுவையுடனும் பருக முடியாத நிலையில் உள்ளது எனவும் கூறுகின்றனர். 




குமரட்டையாபுரம் கிராமம் பெரும்பாலும் விவசாய மக்கள் அதிகம் உள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக விவசாயமும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் தங்களிடம் போதிய பொருளாதாரமில்லாததால், தங்களால் விலை கொடுத்து குடிநீரை வாங்க எங்களிடம் பணம் இல்லை என்று கூறுகின்றனர்.



அதேபோல் தூத்துக்குடி to  மதுரை தேசிய நெடுஞ்சாலையை அருகே சீவலப்பேரி - வல்லநாடு - அருப்புக்கோட்டை இடையிலான கூட்டு குடிநீர் திட்ட இணைப்பு பைப் செல்கிறது, அந்தஇணைப்பில் இருந்து தங்கள் கிராமத்திற்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். கிராமத்தின் மேற்கு பகுதியில் இருந்து கோவில்பட்டி கூட்டுகுடிநீர் நாலக்கம்பட்டி கிராமத்திற்கு செல்லும் குடிநீர் இணைப்பிலிருந்து குடிநீர் தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தால், அந்தப்புகார் மனுக்களைப்பெரும் அதிகாரிகள், அந்த மனுவை கடைநிலை ஊழியரிடம் விசாரிக்க சொல்லி அனுப்புகின்றனர்,அந்த கடைநிலை ஊழியரோ கிராமத்திற்கு குடிதண்ணீர் வந்து கொண்டு தான் இருக்கிறது என்று மேல் அதிகாரிகளிடம் கூறி தப்பித்துக் கொள்வதே வழக்கமாகி உள்ளது என்று கிராம மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.





மேலும் குடிநீருக்காக கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஆண்கள் என அனைவரும் கைகளில் கொடுத்துடனும் தள்ளுவண்டியில் குளங்களை வைத்தும், கால் கடுக்க கிராமத்தின் மேற்கு பகுதியில் 400 மீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி -  நாலக்கம்பட்டி கூட்டுகுடிநீர் செல்லும் பைப் ஒன்றில் இருந்து (OVER FULL ) ஆகி வீணாக வெளியே செல்லும் குடிநீரை கப்பில் எடுத்து குடத்தில் ஊற்றி அந்தக் குடிநீரை தான் தற்போது பருகி வருகின்றனர்.





அதேபோல் குடிநீர் தேவைக்காக மனு கொடுத்தால், குமரட்டையாபுரம் என்ற ஒரு கிராமமே கிடையாது என்று கூறுவதாக கூறுகின்றனர். அதேபோல் தங்களின் கிராமத்தில் வீட்டு வரி, குடிநீர் வசதி என அரசின் அனைத்து வரிகளும் வசூல் செய்யப்படுகிறது அக்கிரம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.




எனவே தற்போது உள்ள தமிழக அரசு தங்களின் 15 ஆண்டுகால குடிநீர் பிரச்சினை சரி செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.