விளாத்திகுளம் பகுதிகளில் தொடர் கொள்ளை : வசூலில் பிசியாக இருக்கும் விளாத்திகுளம் DSP !



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது, குறிப்பாக எட்டையாபுரம் பகுதியில் ஒரு ஆசிரியர் வீட்டில் 65 பவுன் தங்க நகை, மூதாட்டியை கட்டி போட்டு சித்திரவதை செய்து  வெள்ளி கொலுசு மற்றும் 1500 ரூபாய் பணம் திருட்டு, எட்டையாபுரத்தில் பூசாரி ஒருவர் வீட்டில் 2 பவுன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் திருட்டு, வீரப்பட்டி கிராமத்தில் கோவிலின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி, அதேபோல் விளாத்திகுளம் அம்பாள் நகரில் ஒரு வீட்டில் நகை திருட்டு, விளாத்திகுளம் குறிஞ்சி நகரில் 5 பவுன் தங்க நகை திருட்டு, விளாத்திகுளம் பேருந்து நிலையம் மற்றும் சன்னதி தெரு பகுதிகளில் செல்போன் கடைகளில் திருட்டு முயற்சி என பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் பதட்டத்துடனும் இருந்து வரும் சூழ்நிலை தற்போது விளாத்திகுளம் அதனை  சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வருகிறது.


ஆனால் விளாத்திகுளம் DSP சுந்தரபாண்டியன், இந்தத்திருட்டு சம்பவங்களில் உள்ள குற்றவாளிகளை பிடித்து நகைகளை உரியவரிடம் ஒப்படைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும், அதேபோல் விளாத்திகுளம் அருகே சில மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக மதுவிற்ற புகாரில் மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்ட ஒருவருடன் நட்பு பாராட்டி,அந்த நபரின் தோட்டத்திற்கு சென்று குடும்பத்துடன் குளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.



மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச்சென்ற புகாரின் பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஒரு காவலரை, மீண்டும் விளாத்திகுளம் DSP அலுவலகத்தில் பணியமர்த்தி எந்தெந்த இடங்களில் எவ்வாறு பணம் வசூல் செய்யலாம்? எனப்பட்டியில் போட்டு அந்தக்காவலர் மூலமாக எட்டையாபுரம், விளாத்திகுளம் உள்ளிட்ட விளாத்திகுளம் காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள டாஸ்மார்க் பார்களில் வசூல் செய்வதாகவும் கூறப்படுகிறது.



திருடு போன நகை குறித்து,நகை மற்றும் பணத்தை பறிகொடுத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பல நாட்கள் ஆனா நிலையில் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுத்து குற்றவாளிகளை பிடிக்கவோ அல்லது திருடப்பட்ட நகைகளை மீட்கவோ  எந்த முயற்சிகளையும் விளாத்திகுளம் DSP சுந்தரபாண்டியன்  மேற்கொள்ளாமல் வசூல் செய்வதில் மட்டும் தீவிர முயற்சி மேற்கொள்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.