யாருக்கு வேண்டும் உங்களின் சுதந்திர தின விழா?



விளாத்திகுளம் அருகே தீண்டாமை சுவரை எதிர்த்து மூன்று ஆண்டுகளாக போராடும் சங்கரலிங்காபுரம் தலித் சமுதாய மக்கள்...



சுதந்திர தின விழாவில் சுடுகாட்டில் குடியேறி போராட்டம்: தீண்டாமை சுவரை அகற்றக் கோரி கண்ணீர் மல்க கோரிக்கை!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில் தலித் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் 1922-ம் ஆண்டு, தங்களின் வழிபாட்டுத்தளத்திற்கு கல் மண்டபம் அமைத்து அந்தநிலத்தில் தேவாலயம் நடத்தி திருவிழாக்களை தற்போது வரை நடத்தி வருகின்றனர்.



அதேபோல் அந்த தேவாலயம் முன்பு பாதையை மறைத்து, ஊர் பொதுபாதையினை மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒரு நபர்  ஆக்கிரமிப்பு செய்து 1973-ம் ஆண்டில் மாடுகளை கட்டி வந்து பின்பு மாட்டு தொழுவத்தை கட்டினார். பின்பு மூன்றடி உயரத்திற்கு அந்த தீண்டாமை சுவர் கட்டினார், அந்த தீண்டாமை சுவற்றுக்கு 1994-ம் ஆண்டு விளாத்திகுளம் வருவாய்த்துறை கிராமம் நத்தம் நிலவரித் திட்டத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.




3 அடி மன்சுவராக இருந்த தீண்டாமை சுவர் சில ஆண்டுகள் கழித்து 15 அடி உயரத்திற்கு கட்டியுள்ளனர், இந்த தீண்டாமை சுவரை அகற்றக்கோரியும் அந்த இடத்திற்கான பட்டாவை ரத்து செய்யக் கோரியும் பல ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த தலித் சமுதாய மக்கள் போராடி வருகின்றனர்.




இந்தநிலையில் தான் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி முதல் சங்கரலிங்கபுரம் தலித் சமுதாய மக்கள் தீண்டாமை சுவரை அகற்ற கோரியும், விளாத்திகுளம் வருவாய்துறை வழங்கிய முறைகேடான பட்டாவை ரத்து செய்யக் கோரியும், ஆக்கிரமிப்பு செய்துள்ள அந்த ஒரு ஏக்கர் நிலத்தை மீட்டு தர கடந்த மூன்று வருடங்களாக வருவாய்த்துறை அலுவலகம் முற்றுகை, குடியரசு தினம், சுதந்திரதினம் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து மூன்றாண்டுகளாக நடத்தி வந்த நிலையில் தற்போது வரை இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டாத நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் இருந்து ,இன்று சுதந்திர தினத்தை புறக்கணித்தும் தற்போது வரை சங்கரலிங்காபுரம் கிராமத்தின் மேற்குப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் இரவு பகளாக குடியேறி, கைக்குழந்தைகளுடன்,அங்கேயே சமையல் செய்து,அங்கேயே உணவருந்தி போராட்டம் நடத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.





ஆட்சியாளர்கள் மாறினாலும் தங்களின் பிரச்சினைக்கு தற்போது வரை முறையான தீர்வு கிடைக்கவில்லை என்றும், தீண்டாமை சுவரை அகற்றி நிலத்தை மீட்டு தர வேண்டும் என அப்பகுதி சங்கரலிங்கபுரம் கிராம தலித் சமுதாய மக்கள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.