விளாத்திகுளத்தில் பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து: சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக மின்விநியோகம் நிறுத்தம்!






ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் - 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!


 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலையில் பழைய இரும்பு கடை மற்றும் குடோன் நடத்தி வருபவர் சுப்பையா என்பவரது மகன் துரைப்பாண்டி (40). மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த இவர், தற்போது விளாத்திகுளம் காமராஜர் நகரில் வசித்து வருகிறார். 


அதிகாலை சுமார் 3.30 மணி அளவில், இவரது பழைய இரும்பு கடை மற்றும் குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி, குடோனில் இருந்த பழைய இரும்புப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.


இதுகுறித்து விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் தலைமையிலான வீரர்களும், கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) மலையாண்டி தலைமையிலான வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.


அங்கு குடோனில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், அதனை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர வீரர்கள் கடுமையாகப் போராடினர். சுமார் இரண்டரை மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


இந்தத் தீ விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவிலேயே பெட்ரோல் பங்க் மற்றும் ஹோண்டா இருசக்கர வாகன விற்பனை நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.


குடோனில் எரிந்த தீ அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பரவும் அபாயம் இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலிருந்த கட்டிடங்கள், தகரக் கூரைகள் மற்றும் மரங்களின் மீது தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.


தீ மேலும் பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீவிர நடவடிக்கையால், அருகிலிருந்த பெட்ரோல் பங்க் மற்றும் இருசக்கர வாகன விற்பனை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.


இந்தத் தீ விபத்தில் பழைய இரும்பு கடை மற்றும் குடோனில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மொத்தம் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில், பெட்ரோல் பங்குக்கு மிக அருகில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவியது.


இருப்பினும், தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததால், தீ அருகிலுள்ள நிறுவனங்களுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.



மேலும் தீ விபத்து காரணமாக காலையில இருந்து தற்போது வரை அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தம்  செய்யப்பட்டது.


இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து விளாத்திகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.