இலங்கைத் தமிழர் முகாமில் இடி தாக்கி கொத்தனார் பலி - இருவர் காயம்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்குப் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் முனியசாமி (24) மற்றும் பலர் கொத்த வேலை பார்த்து வருகின்றனர்.
வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு இவர்கள் அனைவரும் முகாமைச் சேர்ந்த ஓலைக்குடிசையில் படுத்துத் தூங்கியுள்ளனர். அப்போது இரவு அப்பகுதியில் பெய்த பலத்த மழையின் போது திடீரென இடி தாக்கியுள்ளது. இந்த இடி அவர்கள் தங்கியிருந்த குடிசையின் மீது விழுந்ததில், உள்ளே தூங்கிக் கொண்டிருந்த முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருக்கு வயிறு, வலது விலா எலும்பு மற்றும் வலது தொடையில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், இடி விபத்தில் உடன் தூங்கிக் கொண்டிருந்த மாரிமுத்து (34), சுனில் (45) ஆகியோர் காயம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட இருவருக்கும் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.