விளாத்திகுளம் அருகே காட்டுபன்றிகள் தாக்கியதில் விவசாயி படுகாயம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் அஜித்குமார் (27). நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்ததால், தங்களது தோட்டத்தில் விதைப்பு செய்த மக்காச்சோளம் மற்றும் உளுந்து பயிர்களின் நிலை குறித்து அறிய அஜித்குமார், அவரது சகோதரர் இந்தியன் ஆகியோர் நேற்று தோட்டத்துக்கு சென்றனர்.
இருவரும் நிலத்தை சுற்றிப்பார்த்தனர். மேலும், பயிர்களுக்கு பாதிப்பு இருக்கிறதா என்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது அங்குள்ள புதரில் பதுங்கியிருந்த 2 பன்றிகள் அஜித்குமாரை பின்புறமாக சென்று, தூக்கி வீசியெறிந்துள்ளது.பின்னர் அவரின் கை, கால் மற்றும் உடலில் தாக்கி உள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அவரது சகோதரர் இந்தியன் வந்து, அஜித்குமாரை காப்பாற்ற முயன்றார். அங்கு கிடந்த வேலி கம்பை கொண்டு 2 பன்றிகளை விரட்டியுள்ளார்.
அவரையும் அப்பன்றிகள் தாக்க முற்பட்டுள்ளன. ஆனால், அவர் லாவகமாக தப்பி, அந்த பன்றிகளை வேலி கம்பால் தாக்கினார். இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு திரண்ட கிராம மக்கள், 2 பன்றிகளையும் கற்கள், கம்பு உள்ளிட்டவைகளால் தாக்கி கொன்றனர். தொடர்ந்து காயமடைந்த அஜித்குமாரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு தொடக்கத்திலேயே பன்றிகளின் அட்டகாசம் தொடங்கிவிட்டது. இதனை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அஜித்குமார் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன கோரிக்கை விடுத்துள்ளார்.