அம்மனுக்கு பக்தர் வழங்கிய 2 கிராம் தங்கப் பொட்டுத்தாலியை நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக அர்ச்சகர் மீது புகார் - விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பரபரப்பு!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் அனைத்து முக்கிய வைபவங்களும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சித்திரைத் திருவிழா, திருக்கல்யாண வைபவம், ஆடிப்பூரம், சஷ்டி, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பொட்டுத்தாலி, கண்மலர், வேல், சூலம் உள்ளிட்ட தங்கம் மற்றும் வெள்ளியிலான பொருட்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இவ்வாறு பக்தர்களால் வழங்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கோவில் நிர்வாகத்திடம் முறையாக தெரிவிக்காமல், அங்கு பணியாற்றும் சில அர்ச்சகர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், விருதுநகர் பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு அம்மனுக்கு சுமார் 2 கிராம் எடையுள்ள தங்கப் பொட்டுத்தாலியை அர்ச்சகர் லட்சுமணனிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. அதனை அவர் கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.



இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் உமா மகேஸ்வரியிடம் கேட்டபோது, **“அர்ச்சகர் லட்சுமணன் இந்து சமய அறநிலையத்துறையில் பதிவு பெற்ற அர்ச்சகர் இல்லை. அவர் தனது உறவினர் ஒருவருக்கு பதிலாக இங்கு அர்ச்சகர் பணியை செய்து வருகிறார். தங்கப் பொட்டுத்தாலியை வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக புகார் வந்துள்ளதாகவும்,, இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய விசாரணை நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.. 




இதேபோல், கோவிலுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், அம்மனுக்கு சாத்தப்படும் புடவைகள் உள்ளிட்டவற்றையும் கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் சிலர் வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.


ஏற்கனவே இதே கோவிலில் பக்தர்களால் வழங்கப்படும் வளையல்கள், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை திருடியதாக எழுந்த புகாரின் பேரில் சில அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இதனால், பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை முறையாக பதிவு செய்து பாதுகாக்கவும், கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் அவற்றை எடுத்துச் செல்லும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.