25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட போர் பைப் லைன்..! கடந்த 6 மாதமாக முறையான குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்!
காலி குடங்களுடன் மூன்று மணி நேரமாக காத்திருந்த கிராம பொதுமக்கள் !
மனுவை வாங்க எந்த அதிகாரிகளும் வராததால் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன் செங்கல்படை ஊராட்சிக்குட்பட்ட K.குமாரபுரம் கிராமத்தில் கடந்த ஆறு மாதமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர், அந்த மனு மீது எந்த நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அலட்சியம் காட்டியதால், தற்போது குடிப்பதற்கு குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருவதாகவும், கால்நடைகளை வளர்ப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் கூறி இன்று K.குமாரபுரம் கிராம மக்கள் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் மனு அளிக்க காலி குடங்களுடன் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வந்து காலை 9 மணி அளவில் இருந்து காத்திருந்தனர், காலை 11:00 மணி ஆனா நிலையிலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து எந்த அதிகாரிகளும் முன்வந்து எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்று கேட்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் அறைக்கு சென்றனர்.
ஆனால் அங்கே இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களும் மதியம் 12 மணியான நிலையில் யாரும் வராததால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் அறை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்,12 மணியிலிருந்து 12:45 மணி வரை அலுவலகத்தில் எந்த அதிகாரிகளும் மனுவை வாங்க முன் வரவில்லை, அதனைத்தொடர்ந்து தாமதமாக வந்த திட்ட மேலாளர், மற்றும் காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்குவதற்கான புதிய திட்ட அறிக்கையை மேலிடத்திற்கு அனுப்பியுள்ளோம், தற்போது குடிநீருக்கு மாற்று வழி செய்ய ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கிளம்பிச்சென்றனர்.
இதுகுறித்து K.குமாரபுரம் மக்கள் கூறுகையில்,,, தங்களின் கிராமத்தில் முறையான குடிநீர் வந்து 6 மாத காலம் ஆகிவிட்டது, முறையான குடிநீர் வழங்கக்கோரி பலகட்டமாக பல மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட போர் பைப் லைனை மாற்றித் தர வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை அந்த பைப்லைனில் உடைந்து வருவதால், தங்கள் கிராமத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது,இதனால் 5 கிலோ மீட்டர் தூரம் அருகில் உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்திற்கு சென்று நாங்கள் குடிநீர் எடுத்து வருகிறோம், அதுவும் சில நேரம் இல்லாததால் புழக்கத்திற்கு பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தோம், அப்போது புதிதாக போர் அமைத்து தருகிறோம் என்று கூறினார்கள், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் தற்போது வரை இல்லை என்றும், காலை 9:30 மணிக்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்தோம், மதியம் 1 மணி ஆக உள்ள நிலையில் எங்களின் மனுவை வாங்கக்கூட இங்கு அதிகாரிகள் யாரும் இல்லை என குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
எனவே முறையான குடிநீர் வழங்க வேண்டும் என்று K.குமராபுரம் கிராம பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.