ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில்  நீளம் தாண்டுதலில் 2வது முறையாக தங்கப் பதக்கம் என்று சாதித்துக் காட்டிய விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர்!



விடாமுயற்சி தன்னம்பிக்கையினால் சாதித்து காட்டி நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் பெற்றோர் பெருமிதம்!




தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே உள்ள  A. குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த   தர்மராஜ் - ஈஸ்வரி தம்பதியின் மகன்  சோலைராஜ்(31), கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது  சோலை ராஜ்  தனது 19வயதில் இராணுவத்தில் சேர்ந்த பணியாற்றியானர்.   2018ல் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு தனது இடது காலினை இழந்தார். இருந்த போதிலும் மனம் தளரமால் விளையாட்டில் கவனம் செலுத்தினர். குறிப்பாக நீளம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று தடகள வீரராக மாறினார். 



கடந்த 2023-ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் பங்கேற்ற சோலைராஜ் T64 பிரிவில் 6.80 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். தொடர்ந்து தனது விடமுயற்சியினை கைவிடமால் பயிற்சி மேற்க்கொண்ட சோலைராஜ்  தற்போது ஜப்பானின் நாகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் (Asian Para Games) நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில்  சோலைராஜ் தங்கம்  வென்று உள்ளதால், அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


சோலைராஜ்க்கு திருமணமாகி முத்துப்பிரியா என்ற மனைவியும் தர்ஷிகா ஸ்ரீ, தாரிகா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளன.



 சிறு வயது முதலே சோலை ராஜுக்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே  கிரிக்கெட், வாலிபால், ரன்னிங் ஆகியவற்றில் ஆர்வமாக கலந்து கொள்வான். எழுதுவது படிப்பதை விட விளையாடுவதில் தான் ஆர்வமாக இருப்பான்.அது மட்டுமல்ல ராணுவத்தில் சேர வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. ஒரே மகனை வைத்திருக்கிறோம் ராணுவத்திற்கு அனுப்ப வேண்டுமா என்று எங்களுக்கு தயக்கம் இருந்தாலும், அவனுடைய விருப்பத்திற்கு நாங்கள் தடையாக இருக்கவில்லை. ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி போது உடல்நிலை பாதிக்கப்பட்டு, காலினை இழந்த போது,  மிகுந்த வேதனை அடைந்தோம். வேலை வேண்டாம் விட்டுவிட்டு வந்துவிடு என்று கூறினோம். எனது மகன் நீங்கள் அழக்கூடாது, சாதித்துவிட்டு தான் வருவேன் என்று எங்களுக்கு ஆறுதல் கூறினான். அதே போன்று இன்றைக்கு சாதித்துக் காட்டி நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக சோலைராஜ் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.



 அவருடைய மனைவி முத்துப்பிரியா கூறும் போது  எப்போதுமே  பாசிட்டிவாக பேசுவார். தன்னம்பிக்கையுடன் இருப்பார்.  ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வென்று விட்டார்.ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியம். நிச்சயமாக வெல்வார் என்றார்.



 தனக்கு ஏற்பட்ட பாதிப்பு என்பது ஒரு பாதிப்பு கிடையாது. அதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு  ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறை தங்கப்பதக்கம்  வென்றது மட்டுமின்றி  அடுத்து வரும்  பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் தன்னம்பிக்கையுடன் பயணிக்கும்  விளையாட்டு வீரர் சோலைராஜ் இன்று இளைஞர்களுக்கும், வருங்கால தலைமுறையினருக்கும் ஒரு முன் உதாரணம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.