5 தலைமுறைகளை பார்த்து 100 வயது கண்ட தம்பதிக்கு திருமண வைபவம் நடத்தி ஆசி பெற்ற குடும்பத்தினர் !
எட்டயபுரம் அருகே நடைபெற்ற நெகிழ்ச்சியான திருமண வைபவ நிகழ்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள முத்தலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி தங்கம் (எ) சண்முகசுந்தரம் (100) - மஹாலெட்சுமி(90). இந்த தம்பதிக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 5 பிள்ளைகள். 16 பேரன் பேத்திகள், 14 கொள்ளு பேரன் -கொள்ளுப்பேத்திகள் என 35 குடும்பத்தினர் உள்ளனர்.
இந்த நிலையில் தங்கம் (எ) சண்முகசுந்தரம் 100வது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு குடும்பத்தினர் எல்லோரும் ஒருங்கிணைந்து சாந்தி பூர்ணாபிஷேக திருமண விழாவிற்கு ஏற்பாடு செய்தது மட்டுமின்றி பத்திரிக்கை அடித்து, குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள், கிராம மக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்
5 பிள்ளைகள், 16 பேரன் - பேத்திகள், 14 கொள்ளு பேரன் கொள்ளுப்பேத்திகள், உறவினர்கள் மற்றும் முத்தலாபுரம் கிராம மக்கள் புடை சூழ முத்தலாபுரம் சிவன் கோவிலில் தங்கம் (எ) சண்முகசுந்தரம் - மஹாலெட்சுமி தம்பதிக்கு சாந்தி பூர்ணாபிஷேக திருமண வைபம் நடைபெற்றது. புரோகிதரர்கள் வேத மந்திரங்கள் முழங்க புது மாப்பிள்ளையாக கிரீடம் வைத்து கம்பீரமாக காட்சியளித்த தங்கம் (எ) சண்முகசுந்தரம் தனது மனைவி மஹாலெட்சுமிக்கு மங்கள நாண் பூட்டியதை பார்த்து சுற்றி இருந்த குடும்பத்தினர் மலர் தூவி மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்களிடம் ஆசியும் பெற்றனர். தொடர்ந்து கேக் வெட்டியும் கொண்டாடினர். இதையெடுத்து அனைவருக்கும் அறுசுவை விருந்தும் பரிமாறப்பட்டது.
மணமகளாக ஜொலித்த மகாலட்சுமி கூறுகையில் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்து அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து, பேரன் கொள்ளு பேரன் என ஐந்து தலைமுறைகளை பார்த்து விட்டதாகவும், எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் எவ்வித குறையும் கிடையாது, மீண்டும் எங்களுக்கு திருமணம் செய்து வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியில் எல்லோரையும் ஒரே இடத்தில் பார்த்து விட்டதாக புரிப்புடன் கூறினார்
தாத்தாவிற்கு நூறு வயதாகி விட்டது என்பதால் அவருக்கு 100வது கல்யாணம் செய்ய வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம். அதன்படி அனைவரும் ஒன்றிணைந்து முடிவு செய்து, திருமணத்தை நடத்தினோம். மகிழ்ச்சியாக உள்ளது எங்கள் குடும்ப மட்டுமின்றி கிராம மக்களும் வந்து தாத்தா பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றனர். தற்போதும் அவர்கள் இளமையாக இருப்பது எங்களுக்கு ஆச்சரியம் அளிப்பது மட்டுமின்றி மகிழ்ச்சியான விஷயம் என்கிறார் அந்த தம்பதியின் கொள்ளு பேரன் ஜெயக்குமார்.
பிள்ளைகள், பேரன் பேத்திகள், கொள்ளு பேரன் கொள்ளுப்பேத்திகள் என இணைந்து ஐந்து தலைமுறை கண்ட தம்பதிக்கு விழா எடுத்த நிகழ்வு என்பது அந்த கிராம மக்களை மட்டும் அல்ல அப்பகுதி முழுவதிலும் இன்றைக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதையும் எடுத்துக்காட்டி உள்ளது.