எட்டையாபுரம் அருகே 3000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி தொல் தடயங்கள் கண்டெடுப்பு!



5 ஏக்கரில் பரப்பளவில் உள்ள முதுமக்கள் தாழிகளை முழுமையாக தொல்லியல் துறை அகழாய்வு செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை?


முதுமக்கள் தாழி என்பது புதிய கற்காலத்தின் கடைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பெருங்கற்கால புதைப்பு முறைகளைப் பின்பற்றத் தொடங்கினர், இம்முறையின்படி இறந்தவர்களின் உடல் பெரிய மண்பாண்டத்தில் வைக்கப்படும், அதோடு அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் தானியங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளை அந்த மண்பானையில் வைத்து புதைக்கப்படும்.


இந்தப் பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் இரும்பை குறித்த அறிவைப்பெற்றிருந்த சமூகமாக கூடி வாழத்தெரிந்த மிகவும் முன்னேறிய தமிழ் நாகரீகத்திற்கான சாட்சிகளாக கூறப்படுகிறது, இன்று உலகில் அகல ஆராய்ச்சி செய்த பார்த்தபோது, தமிழகத்தில்தான் அதிக முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி காட்டுப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதுமக்கள் தாழியின் தொல் தடயங்கள் காணப்பட்டது, இதனை அடுத்து கிராம மக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், பின்னர் வருவாய்த்துறையினர் கள ஆய்வு மேற்கொண்டதில் 3000  ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்பானை தாழிகளின் ஓடுகள், மனிதர்களின் கை மற்றும் கால் எலும்புகள், மண்டை ஓடுகள், பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட முதுமக்கள் தாழி இருப்பது உறுதி செய்யப்பட்டது, பின்னர் தொல் தடயங்களை பாதுகாத்து அகழாய்வு செய்வதற்கு வட்டாட்சியர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.



ஆனால் தற்போது வரை எந்த அகழாய்வும் பண்ணாததால், தற்போது அந்த நிலத்தில் உள்ள முதுமக்கள் தாழியின் தொல் தடயங்கள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டு வருவதாகவும், அதேபோல் அந்த 5 ஏக்கர் நிலத்தில் பல்வேறு பகுதிகளில் முதுமக்கள் தாழி இருப்பதாகவும் அதனை முழுமையாக அகழாய்வு செய்து 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாலிகளை பாதுகாக்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.