எட்டையபுரம் பேரூராட்சியில் பாஜக தலைமையில் காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆவேசம்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யாமல் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை மட்டுமே வழங்கி வந்துள்ளனர். இதன் நீட்சியாக தற்போது மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்பட்டுவந்துள்ளது. அவ்வாறு வழங்கப்ப்ட்ட குடிநீரும் கலங்களாக குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் முற்றிலும் லாயக்கற்ற குடிநீரை வழங்கப்படுவதைக் கண்டித்து இன்று பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆத்திராஜ் தலைமையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எட்டையபுரம் பேரூராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த பேரூராட்சி செயல் அலுவலர் , பேரூராட்சி தலைவர் ராமலட்சுமியிடம் கடும் கோபத்தில் இருந்த மக்கள் தண்ணீரின்றி தாங்கள் படும் இன்னல்களை ஆவேசமாக கூறினர். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்படும் தண்ணீரை பேரூராட்சி செயல் அலுவலரிடம் கொடுத்து "இந்த தண்ணியை நீங்க குடிப்பீங்களா...? குடிங்க பாப்போம்.." என அலற விட்டனர். இதற்கிடையில் பேரூராட்சி தலைவர் இராமலட்சுமி மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையைக் கையாளாமல் அலட்சியமான பதில்களையே கொடுத்து வந்தது... போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் மீதான அதிருப்தியையும், எதிர்ப்பையும் அதிகமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் ,நெசவாளர் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் நாகராஜன், ஒன்றிய தலைவர் சரவணகுமார், பொதுச் செயலாளர்கள் ஹரிஹரசுதன் ,ஆட்டோ காளிராஜ் ,ஆன்மீகப் பிரிவு மாவட்ட செயலாளர் சாய் சிவசுப்பிரமணியன் ,ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ஒன்றிய மகளிர் அணி தலைவி கார்த்திகா, இந்து முன்னணி ஜெயச்சந்திரன், மற்றும் செல்வகணேஷ்,மைதீன்துரை,மணிகண்டன்,மந்திரமூர்த்தி ஏனைய நிர்வாகிகள் பொதுமக்கள் என பல கலந்து கொண்டனர்.
மேலும், எட்டையபுரம் பேரூராட்சியில் தண்ணீரை முறையாக வழங்கப்படுவதும் கிடையாது...அப்படி மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே விநியோகிக்கப்படும் குடிநீரும் இவ்வளவு மோசமாக உள்ளது என எட்டையபுரம் பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் கோவில்பட்டி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தினசரி 6.00 லட்சம் லிட்டர் வழங்க கோவில்பட்டி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் உறுதியளித்ததன்பேரில், எட்டயபுரம் பேரூராட்சியில் குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து கிடைக்கப்பெறும் சீவலப்பேரி குடிநீர் இணை அப்படியே நேரடியாக எட்டையபுரம் பேரூராட்சி பொதுமக்களுக்கு குளோரினேஷன் செய்து விநியோகம் செய்யப்படும் என்றும், இதில் உள்ளூர் குடிநீர் எதுவும் கலந்து வினியோகம் செய்யப்பட மாட்டாது என்றும், வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சமாதான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.