தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதல் ஏற்பட்ட போது வேம்பார் கிராமத்தில் கடற்கரையில் வசித்து வந்த 30 முத்தரையர் இன குடும்பங்களை அரசு தற்காலிகமாக சுனாமி குடியிருப்பில் குடிசை வீடுகளில் தங்க வைத்தது. தொடர்ந்து அந்த பகுதியில் சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டிய போது 13 குடும்பங்களுக்கு வீடு வழங்கினார்கள். மீதமுள்ள 20 குடும்பங்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை.குடிசை வீடுகள் சேதமடைந்துவிட்டன. எங்கள் வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் வசதி கிடையாது. நாங்கள் மிகவும் வறுமை நிலையில் இருக்கிறோம். குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை. எனவே, அரசு எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் எங்களை கருணை கொலை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.