தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில், அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதால் அப்பகுதியில் மேம்பாலம் ஒன்று கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக மாநில மற்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் பொது மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாததால் இப்பகுதியில் தொடர்ந்து அதிகப்படியான வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் (NH-38) அமைந்துள்ள எட்டையபுரத்தில் மேம்பாலம் இல்லாத காரணத்தினால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சாலையானது தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மதுரை, சென்னை, பெங்களூர் வரையிலும் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக இருந்து வருகிறது. இதில் எட்டையபுரத்தில் இருந்து விளாத்திகுளம் செல்லும் நெடுஞ்சாலையை பயன்படுத்தியே  இராமேஸ்வரம்,  திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் சென்று வருகின்றது. இதனால் மிகவும் முக்கியமான நான்கு வழி சாலையாக இருந்து வரும் இந்த எட்டையபுரம் சந்திப்பு மற்றும் கீழ ஈராலில் தொடர்ந்து அதிகப்படியான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் தூத்துக்குடியிலிருந்து - மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மக்களின் கோரிக்கையை அரசாங்கமும், ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளாத ஒரே காரணத்தினால் இப்பகுதியில் அதிகப்படியான வாகன விபத்துக்கள் ஏற்பட்டு அனாமத்தாக பல உயிர்கள் போகும் ஆபத்தான சூழ்நிலைதான் தொடர்ந்து நிலவி வருகிறது. அதிலும் இங்கு அதிகளவில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சாலை கடக்கும் போது அனேக நேரங்களில் வாகன விபத்தில் சிக்கி உடல் ஊனம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட சராசரியாக ஆண்டிற்கு நூற்றுக்கணக்கான வாகன விபத்துக்களால் பல உயிரிழப்புகள் ஏற்படும் இந்த எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கீழ ஈரால் நெடுஞ்சாலையில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மேம்பாலம் அமைத்து விபத்துகளால் பறிபோகும் உயிர்களை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் மிக முக்கியமான கோரிக்கையாக இருந்து வருகிறது....