கழுதையிடம் மனு கொடுக்க அனுமதி மறுத்த போலீசார்  - கழுதை புகைப்படத்திடம் மனு கொடுத்து  நூதன போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் பேரரசு கட்சியினர் - கோவில்பட்டியில் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வந்த நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை புதுப்பிக்கும் பணிகளுக்காக இடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வியாபாரம் செய்த வியாபாரிகளுக்காக நகராட்சி சார்பில் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் தற்காலிக தினசரி சந்தை அமைக்கப்பட்டு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு ஒரு பிரிவினர் வியாபாரம் செய்து வருகின்றனர். மற்றொரு பிரிவினர் திட்டங்குளம் ஊராட்சி பகுதியில் தனியாக புதியதாக சந்தை ஆரம்பித்து காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தனியார் சந்தையை மூட உத்தரவிட்டார். சில தினங்கள் மூடிய நிலையில் மீண்டும் தனியார் காய்கறி சந்தை செயல்பட  தொடங்கியது .

இதற்கிடையில் எவ்வித அனுமதி பெறாமல் செயல்படும் தனியார் தினசரி சந்தையை மூட வலியுறுத்தி தமிழ்ப்பேரரசு மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். உரிய அனுமதி பெறமால் செயல்படும் தனியார் தினசரி சந்தையை  மூட நீதிமன்றம் உத்தரவிட்டது.‌அதன் பின்னர் அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மீண்டும் நீதிமன்றத்தில் சரவணன் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் தனியார் தினசரி சந்தை செயல்பட தடை விதித்தது மட்டுமின்றி,, அதனை  கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. ஆனால் தற்போது வரை தனியார் தினசரி சந்தையை மூட கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார‌ வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்தும் நீதிமன்ற உத்தரவினை செயல்படுத்த வலியுறுத்தியும் தமிழ்ப்பேரரசு கட்சி சார்பில் கோவில்பட்டி.    இ.எஸ்.ஐ‌  மருந்தகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியது மட்டுமின்றி, பேனரில் அடிக்கப்பட்டிருந்த கழுதை புகைப்படத்திடம் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு தமிழ் பேரரசு கட்சியின் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மனு கொடுக்கும் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் இசக்கிமுத்து, மாவட்ட பொருளாளர் குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி  செயலாளர் லட்சுமண பாண்டியன்,  கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் பாலமுருகன், நகர மாணவரணி செயலாளர்  சரவண கார்த்தி, சமூக ஆர்வலர்கள் கணேஷ் குமார், மாரி கணேஷ், ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்ப்பேரரசு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு தடை விதித்த போலீசார், இ.எஸ்.ஐ மருந்தகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்தனர். போராட்டத்தின் இறுதியில் தமிழ்ப்பேரரசு கட்சியினை வைத்திருந்த கழுதை படத்தையும்  போலீசார் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.