திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லேப்டாப் மற்றும் பணத்துடன் கீழே கிடந்த பையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் நேற்று (10.06.2023) கோவில்பட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது பையை லேப்டாப் மற்றும் ரூபாய் 1,30,000/- பணம் ஆகியவற்றுடன் தவறவிட்டுள்ளார். அந்த பையை மார்க்கெட்டில் உள்ள கடைக்காரர் ஒருவர் எடுத்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் சென்று உதவி ஆய்வாளர் திரு. முருகன் அவர்களிடம் ஒப்படைத்தார். அந்தப் பையை போலீசார் வாங்கி பையை தவறவிட்டவர் யார் என கண்டுபிடித்து உரியவரிடம் பையை ஒப்படைத்தனர். மேலும் ரூ.1,30,000/- பணம் மற்றும் லேப்டாப் உடன் கிடந்த பையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தவரின் நேர்மையை  போலீசார் பாராட்டினர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.