கோவில்பட்டி பகுதியில் முறையற்ற உரிமத்துடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1330 லிட்டர் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பறிமுதல் - உணவு பாதுகாப்பு உரிமமின்றி உணவுப் பொருள் கொண்டுசென்ற வாகனமும் பறிமுதல்: உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடவடிக்கை

சுகாதாரத்துறையின் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் திரு.லால்வேனா மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். கி.செந்தில்ராஜ் ஆகியோரது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் இம்மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. அதன் தொடர்ச்சியாக திடீர் ஆய்வின் அடிப்படையில், தூத்துக்குடி உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் அவர்களின் தலைமையில், கோவில்பட்டி ஒன்றிய பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாஸூ ஆகியோர் அடங்கிய குழுவினர், நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை பகுதிகளில் ஆய்வு செய்தனர். நாலாட்டின்புதூர் பகுதியில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்துகொண்டிருந்த வாகனத்தை ஆய்வு செய்தபொழுது, வாகனத்திற்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததும், தண்ணீர் அடிப்படையிலான பானம் என்ற பெயரில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றுவிட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டும் பாட்டிலில் அடைத்து, பி.ஐ.எஸ் (ஐ.எஸ்.ஐ) சான்றிதழும், உரிய லேபிள் விபரங்களுமின்றி இருந்ததும் கண்டறியப்பட்டது. எனவே, 7 லட்சம் மதிப்புள்ள வாகனமும், 1330 லிட்டர் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரும் பறிமுதல் செய்யப்பட்டது. உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வறிக்கையின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல, கழுகுமலை பகுதியில் வேல்கொடி பார் என்ற டாஸ்மாக் கடையுடன் இணைந்த பாரில் ஏற்கனவே பயன்படுத்திய பாட்டிலில் குடிநீர் நிரப்பி விற்பனை செய்ததும், அச்சிட்ட காகிதங்களையும், அனுமதியற்ற ப்ளாஸ்டிக் டம்பளர்களையும் உணவுப் பொருள் விநியோகம் செய்ய வைத்திருந்ததால், பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சுகாதாரமற்ற வகையில் உணவுப் பொருள் வைத்திருந்ததால், அவையும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் பொது சுகாதார நலனை முன்னிறுத்தியும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (உணவு வணிக உரிமம் மற்றும் பதிவு) ஒழுங்குமுறைகளின் கீழும் அந்நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை இடைக்கால ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இக்குற்றத்திற்காக அந்த பாரின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*வணிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை: *

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமலோ அல்லது காலாவதியாகிய பின்னரோ உணவு வணிகம் புரிவது என்பது சட்ட விதிமீறல் என்பதால் உணவு பாதுகாப்புத் துறையால் உணவு வணிக நிறுவனம் மூடப்படும் என்பதுடன், ஐந்து லட்சம் ரூபாய் வரையில் அபராதமும், சிறை தண்டனையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றால் மட்டும் போதாது. உணவு வணிக வளாகத்தினை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் விதிமுறைகளைப் பின்பற்றி சுகாதாரமாக வைத்திடல் வேண்டும். தவறினால், இது போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கப்படுகின்றது.நுகர்வோர்களும் வணிகர்களும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் வாங்கும் போது ஐ.எஸ்.ஐ முத்திரையும், FSSAI உரிம எண்ணும் உள்ளது என்று கவனித்துப் பார்த்து வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. உணவுப் பொருட்களின் தரங்கள் குறைபாடு மற்றும் கடையின் சேவை குறைபாடு குறித்து, நுகர்வோர்கள் புகாரளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.

இவண்,

டாக்டர்.ச.மாரியப்பன், எம்.பி.பி.எஸ், எம்.பி.எச்.,

நியமன அலுவலர்,

உணவு பாதுகாப்புத் துறை,

தூத்துக்குடி மாவட்டம்.