மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் - விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கோரிக்கை.!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் மானாவாரி விவசாய நிலத்தில் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம் கொத்தமல்லி, சூரியகாந்தி போன்ற பயிர்களை பயிர் செய்திருந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக விளாத்திகுளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் மழை நீரால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உளுந்து, பாசி, கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்கள் அனைத்தும் அழுகி காணப்படுகிறது. இதே போன்ற கடந்த ஆண்டும் மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தினால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது ஐந்து ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அதேபோன்று இந்த ஆண்டும் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை தற்போது கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகையால் கடந்த ஆண்டு போல ஐந்து ஏக்கர் என்ற வரம்பு நிர்ணயம் செய்யாமல் பாதிக்கப்பட்ட அனைத்து நிலங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் எட்டயபுரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்..