தமிழக முன்னாள் முதல்வரும், அஇஅதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிப்பதற்காக முன்னாள் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ-வின் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் தூத்துக்குடி விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க கோவில்பட்டியில் இருந்து வந்த மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் சீனிராஜ் என்பவரை பார்த்து, "கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நபர் கட்சியை காட்டிக் கொடுத்த நபர் நீ வரக்கூடாது" என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில்... இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ-விற்கு ஆதரவாக கட்சியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் விமான நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து உடனடியாக போலீசார் அவர்களை தடுத்து கலையச்செய்தனர்.