அபராதம் என்ற பெயரில் லஞ்சம் கேட்பதாக - வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு - மண்சட்டி கையில் ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு என்ற பெயரில் அப்பாவி ஆட்டோ தொழிலாளர்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும், விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திய பின்னரும் சம்பந்தம் இல்லாத வகையில் வேறு பல வண்டிகளின் அபராத தொகையையும் செலுத்த வேண்டும் என்று லஞ்சத்தை விஞ்ஞான முறையில் வாங்கி வருவதாகவும் , அபராதம் செலுத்திய பின்னும், கூடுதல் பணம் செலுத்தினால் தான் வாகனத்தை ஒப்படைப்போம் என்று வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் கூறுவதை கண்டித்து பாஜக சார்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
பாஜகவின் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் கையில் மண்சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் கூறியதால் கையிலிருந்த மண் சட்டியை தரையில் போட்டு உடைத்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்துள்ளனர். இதற்கிடையில் அபராதம் என்ற பெயரில் லஞ்சம் கேட்பது தொடர்பாக ஆட்டோ டிரைவர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஊழியர்கள் இடையிலான உரையாடல் ஆடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது