தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 68வது உற்சவ திருவிழா 10-05-2024 மற்றும் 11-05-2024 ஆகிய இரு தினங்களில் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது, இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவது வழக்கம். திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் புதியம்புத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி,மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 5 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள்,20 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள்,68 காவல் ஆய்வாளர்கள்உதவி ஆய்வாளராக உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், இந்த திருவிழாவின்போது 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர், திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காவல்துறையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும் அறிவுரை வழங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, சைபர் குற்ற பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த ஏராளமான காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.