தியாகி விஸ்வநாத தாஸ் 137வது பிறந்த நாள் விழா - கோவில்பட்டியில் மலர் தூவி மரியாதை!
கோவில்பட்டி வ.உ.சி நகரில் உள்ள மருத்துவர் முடிதிருத்துவோர் தொழிலாளர் சங்க கட்டிடத்தில் தியாகி விஸ்வநாத தாஸ் 137வது பிறந்த நாள் விழா மருத்துவர் முடிதிருத்துவோர் தொழிலாளர் சங்க சார்பில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் குருசாமி தலைமையில் அச்சங்க நிர்வாகிகள் தியாகி விஸ்வநாத தாஸ் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இனிப்புகளும் வழங்கினர். இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மருத்துவர் சமூகத்தினை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு கல்வி உதவி தொகை வழங்க வேண்டும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், அரசு மருத்துவமனையில் உள்ள பணிகளில் மருத்துவர் சமூகத்தினை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை வேண்டும், மேலும் கோவில்பட்டி அருகே தோணூகால் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு மருத்துவர் முடிதிருத்துவோர் தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.

ஆனால் அளவீடு செய்து தரவில்லை என்பதால் எவ்வித பணிகளும் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதாகவும், எனவே முறையாக அளவீடு செய்து நிலத்தினை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றினர்.
இதில் மருத்துவர் முடிதிருத்துவோர் தொழிலாளர் சங்க செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் கருமாரி ஈஸ்வரன், மாநில துணைதலைவர் பாலகிருஷ்ணன், கௌரவ ஆலோசகர் முருகன், இளைஞர் அணி செயலாளர் மாரிமுத்து, கமிட்டி உறுப்பினர் முருகன், மருத்துவர் சமுதாய அறக்கட்டளை தலைவர் கருப்பசாமி, இளைஞர் அணி இணை செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இறுதியில் உறுப்பினர்கள் கருத்தப்பாண்டி, மகாலிங்கம் ஆகியோர் நன்றியுரையாற்றினார்.