தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள என். சுப்புலாபுரம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வாராஹி பஞ்சமி குருபீட ஞானஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நடைபெறும் விசேஷ பூஜையில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த பஞ்சமி குருபீட ஞானஸ்தலத்தில் வாராஹி அம்மனுக்கு நடைபெறும் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு மனம் உருகி வேண்டினால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்ற ஐதீகம் இருப்பதால் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று இங்கு திரளான பெண்கள் அம்மனுக்கு விளக்கு பூஜை செய்து வேண்டிக்கொள்வர். இத்தகைய பிரசித்தி பெற்ற ஸ்ரீ வாராஹி பஞ்சமி குருபீட ஞானஸ்தலத்தில், அமைந்துள்ள குபேர பகவானுக்கும் - சித்ரக்கலா அம்பிகை சன்னதிக்கு முன்பாக இன்று உற்சவர் பகவானுக்கும் - அம்பிகைக்கும் "திருப்பூட்டு வைபவம்" மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி குபேர பகவானுக்கும் - சித்ரக்கலா அம்பிகைக்கும் பால், சந்தனம், மஞ்சள் போன்ற பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மலர்களால் நன்கு அலங்காரம் செய்யப்பட்டு பகவானும்-தேவியும் பக்தர்களுக்கு மணக்கோலத்தில் அழகுற காட்சியளித்தனர். இதைத்தொடர்ந்து காப்பு கட்டப்பட்டு, ஹோமம் வளர்க்கப்பட்டு மாங்கல்ய தானத்துடன் திருப்பூட்டு வைபவம் கோலாகலமாக நடந்தது. இதைக் கண்ட பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்தில் குபேர பகவானையும், சித்ரக்கலா அம்பிகையையும் தரிசித்து ஞானஸ்தலத்தில் வழங்கப்பட்ட அருட்பிரசாதம் பெற்றுச் சென்றனர்.