விளாத்திகுளம் அருகே "தேய்பிறை பஞ்சமியை" முன்னிட்டு ஸ்ரீ வராகி அம்மனுக்கு பெண்கள் விளக்கேற்றி வழிபாடு - பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் வருகை!
ஆனி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள என்.சுப்புலாபுரம் என்ற நரிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.மேலும் வாராகி அம்மனை தரிசனம் செய்ய உகந்த தினமாக கருதப்படும் தேய்பிறை பஞ்சமி தினமும், வெள்ளிக்கிழமையும் ஒன்றாக கூடி வருவதையொட்டி இன்று கோவிலில் விசேஷ பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி,
வாராகி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு எலுமிச்சை, செவ்வரளி, விரலி மஞ்சள், அதிரசம், தென்னங்குருத்து மற்றும் மலர்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை கட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் அனைவரும் வாழை இலையில் அரிசி, தேங்காய், பழம் உள்ளிட்டவற்றை வைத்து "தேங்காய் விளக்கேற்றி" அம்மனை மனம் உறுதி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மேலும், இந்த சிறப்பு வாய்ந்த "நரிப்பட்டி வராகி அம்மன் கோவிலில்" ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி தினங்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.