இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த  அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான புன்செய் நிலங்களை ஏராளமான தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்றும், அவற்றை மீட்க வேண்டும் என்றும் விளாத்திகுளத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கை (W.P.(MD)NO.13986/2021) விசாரித்த நீதிபதிகள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு பாத்தியப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றி கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.இருப்பினும் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தாத காரணத்தினால் சமூக ஆர்வலர் கணேசன் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (Con.P(MD)755/2023) தொடர்ந்தார்.இதையடுத்து வழக்குகளின் உயர்நீதிமன்ற உத்தரவுகளின் படி, விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையபுரம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனி நபர்கள் பெயரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 46 ஏக்கர் புன்செய் நிலங்களின் பட்டாக்களில் இருந்து தனிநபர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் திருக்கோவிலின் பெயரில் பட்டாக்கள் பெயர் மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து இன்று முதற்கட்டமாக அயன்பொம்மையாபுரம் கிராம புல எண்கள்: 597/3B3, 598/2B2, 655/1, 655/2, 587/2, 604/1A, 586/1, 597/2A, 597/3A1, 597/3B1, 597/1B உள்ளிட்டவற்றில் உள்ள 22‌.48 ஏக்கர் புன்செய் ஆக்கிரமிப்பு நிலங்கள் இந்து சமய அறநிலை துறையின் தூத்துக்குடி இணை ஆணையர் உத்தரவின் படி உதவி ஆணையர் சங்கர் தலைமையில் இன்று காவல்துறை மற்றும் வருவாய்துறை, தீயணைப்புத் துறை ஆகியோரின் உதவியுடன் தனி நபர்களின் ஆக்கிரமிப்புகளிலிருந்து நிலங்கள் மீட்கப்பட்டு திருக்கோவிலுக்கு சுவாதீனம் பெறப்பட்டது.இவ்வாறு சுவாதீனம் பெறப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதே போன்று விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து முற்றிலுமாக மீட்கப்பட்டு திருக்கோவிலுக்கு சொந்தமாக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.