விளாத்திகுளம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி மின்னல் தாக்கி உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் - ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெரிய முனியாண்டி என்பவரின் மகன் துரைப்பாண்டி (43 ) இவருக்கு ராசுகுட்டி, என்ற மனைவியும் மூன்று (சிறு குழந்தைகள்) மகன்களும் உள்ளனர் இவர் விவசாயம் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்த காரணத்தினால் தனது கிராமத்துக் காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆடுகள் எப்போதும் போல வீட்டுக்கு வந்து விட்டன ஆனால் இவர் வெகு நேரம் ஆகியும் இவர் வீட்டுக்கு வரவில்லை , சந்தேகமடைந்து இவருடைய மனைவி,அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேடிப்பார்த்த போது காட்டுக்குள் மின்னல் தாக்கி உடல் கருகி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து கிராம மக்கள் உடனடியாக மாசார்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து தகவல் அறிந்த மாசார்பட்டி போலீசார் துரைப்பாண்டி உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.