விளாத்திகுளம் அருகே தொப்பம்பட்டியில் மணல் குவாரியில் அமலாக்கத் துறையினர் திடீர் ஆய்வு - பின்னணி?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை தொப்பம்பட்டியில் கடந்த 2007 முதல் 2011-ம் ஆண்டுகள் வரை திமுக ஆட்சி காலத்தில் செயல்பட்ட மணல் குவாரியில் அமலாக்க துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.. 15 பேர் கொண்ட குழுவினர் துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸ் பாதுகாப்புடன் ரேடார் மற்றும் ட்ரோன்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மணல் வாங்குபவர்களுக்கு அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது. இந்தநிலையில், இதில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்கு, குவாரி ஒப்பந்தகாரர்களின் வீடு, அலுவலகங்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். மேலும் திருச்சி, கரூர், வேலூர், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 5 மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தொப்பம்பட்டி வைப்பாற்றில் கடந்த 2007 முதல் 2011-ம் ஆண்டுகள் வரை திமுக ஆட்சி காலத்தில் மணல் குவாரி செயல்பட்ட இடத்தில் தற்போது அமலாக்க துறையினர் இன்று மதியம் முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர்.. 15 பேர் கொண்ட குழுவினர் தற்போது செயல்படாமல் இருக்கும் மணல் குவாரியில் அரசு அனுமதி வழங்கியதை விட மணல் அள்ளப்பட்டதா? என்றும் இதில் விதிமுறீல்கள் நடைபெற்றுள்ளனவா? என்பது குறித்து துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் ரேடார் கருவிகள் மற்றும் ட்ரோன்கள் பறக்கவிட்டு மணல் அள்ளப்பட்ட இடங்களையும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி அமலாக்கத்துறை அதிகாரிகளால், தற்போது செயல்பட்டு வரும் மணல் குவாரிகள், சமீபத்தில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் மற்றும் அதன் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் மட்டுமே நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மணல் குவாரி செயல்பட்ட இடத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருவது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.