விளாத்திகுளம் அருகே ராணுவ வீரர் கத்தியால் குத்திக் கொலை ஒருவர் கைது - பெண் தொடர்பு - முன்விரோதம் தான் காரணமா ? தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேதமுத்து - பாக்கியலட்சுமி தம்பதியரின் மகன் வேல்முருகன்(25). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியில் இருந்து வந்த இவர் கடந்த 1ஆம் தேதி விடுப்பில் சொந்த ஊரான வெம்பூருக்கு வந்துள்ளார். இந்நிலையில் ,நேற்று இரவு வீட்டின் மாடி அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.  அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி (27) என்ற இளைஞர் வேல்முருகன் வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள மாடிப்படி வழியாக ஏறி மாடிக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரர் வேல்முருகனை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் மாடி அறையில் இருந்து படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி வந்த வேல்முருகன் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். வீட்டின் கீழ் பகுதியில் உள்ள அறையில் இருந்த அவரது தாய் பாக்கியலட்சுமி, சகோதரி முருகவள்ளி ஆகியோர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சில நிமிடங்களிலேயே ராணுவ வீரர் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு   தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து,போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். வேல்முருகன் உடலை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்த காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டது.இதனிடையே எட்டயபுரம் காவல் நிலையத்தில் ராணுவ வீரர் வேல் முருகனின் குடும்பத்தினர் மற்றும் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் அன்புராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஷ்டி பாய், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசின் உதவிகள் கிடைக்க ஆவண செய்யப்படும் என தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ராணுவ வீரர் வேல்முருகனின் குடும்பத்தினர் அவரது சடலத்தை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனை முடிவடைந்து வெம்பூரில் இரவில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக லெப்டினன்ட் கர்னல் பிரதோஷ், சுபேதார் வரதராஜன், ஹவில்தார் சுரேஷ் ஆகியோர் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். விடுப்பில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் வேல்முருகன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்ட ராணுவ வீரர்கள் மற்றும் வெம்பூர் கிராம மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் போலீசார் மாரிச்சாமியை  போலீசார் கைது செய்துள்ளனர்,இது குறித்து போலீசார் தரப்பில் கேட்ட போது கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் வேல்முருகனுக்கும் கைது செய்யப்பட்ட மாரிச்சாமிக்கும்  இடையே  ஒரு பெண் தொடர்பில் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், மேலும் வெம்பூரில் உள்ள பேரூந்து நிறுத்தத்தில் வைத்து கடந்த 15ஆம் தேதியன்று இருவருக்கும் இடையே சாதிய ரீதியாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . மேலும் வாட்ஸ் அப் மூலமாக  இருவருக்கும் இடையே வாக்குவாதம் செய்ததாகவும், இதன் காரணமாகவும் இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கமணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன், ஸ்ரீவைகுண்டம்  டிஎஸ்பி மாயவன்சைபர் கிரைம் டிஎஸ்பி உண்ணி கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் 200க்கும் மேற்பட்ட  போலீசார் வெம்பூர் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.