கடல் சார்  (SUP) விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த கோவில்பட்டி தனியார் ஆலை இளம் பெண்கள் - தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி! பொதுவாக பெண்கள் ஏதாவது துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முயற்சி இருந்தால் நிச்சயமாக முடியும் என்று சாதித்து காட்டியுள்ளனர்  கோவில்பட்டியை சேர்ந்த 3 இளம் பெண்கள்! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துகுட்டி, அயன்விருசம்பட்டியை சேர்ந்த முத்துமாரியம்மாள், சிதம்பரபுரத்தினை சேர்;ந்த ராமலெட்சுமி. இந்த 3 பெண்களும் பள்ளி படிப்பினை முடித்த பின்னர் குடும்பத்தின் வறுமையின் காரணமாக மேற்படிப்பினை தொடர முடியமால் கோவில்பட்டி ரெயில்வே நிலையம் அருகே செயல்பட்டு வரும் லாயஸ் மில் டெக்ஸ்டைல் பிரிவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக டெய்லராக பணியாற்றி வருகின்றனர். மேலும் அந்த மில் நிர்வாகம் இவர்களுக்கு உயர்கல்வி படிக்கவும் உதவி செய்து வருகிறது. இந்த 3 பெண்களும் சிலம்பத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதால் இவர்களின் விளையாட்டு திறனை கருத்தில் கொண்டு, SUP என்று அழைக்கப்படும் பால்க் பே ஸ்டாண்ட் அப் பேடில் போர்டிங் போட்டிக்கு தயார்ப்படுத்தியுள்ளனர். இதற்காக ராமநாதபுரத்தில் இவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். அது மட்டுமின்றி கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், ராமநாதபுரத்தில் உள்ள குவெஸ்ட் அகாடமியில் நடந்த பால்க் பே ஸ்டாண்ட் அப் பேடில் போர்டிங் (SUP) சாம்பியன்ஷிப்பில் 200 மீட்டர் ஓபன் ஸ்பிரிண்ட் பந்தயத்தில் மூன்று பெண்களும் கலந்து கொண்டனர். இதில் முத்துக்குட்டி முதலிடத்தினையும், முத்துமாரியம்மாள் 2வது இடத்தினையும், ராமலட்சுமி 3வது இடத்தினையும் பிடித்து அசத்தியது மட்டுமின்றி தேசிய அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர். தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 3 பெண்களை மில் நிர்வாகம் பாராட்டியுள்ளது.சாதிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட தங்களுக்கு தங்களுடைய நிர்வாகம் கொடுத்த ஊக்கத்தினால் வெற்றி பெற முடிந்ததாகவும், இது தங்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்துள்ளதாக  வெற்றி பெற்ற இளம் பெண்கள் தெரிவித்துள்ளனர்.