திருப்பதி - சென்னை இடையே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு கையகப்படுத்த நிலங்கள் மீண்டும் விற்பனை செய்யப்படுவதாக புகார்?
திருப்பதி - சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலை (205) விரிவாக்கத்திற்கு கையகப்படுத்த நிலங்கள் மீண்டும் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
திருப்பதி - சென்னை இடையே போக்குவரத்து அதிகரித்து வந்ததால் தேசிய நெடுஞ்சாலை (205) விரிவாக்கம் செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்தது. அதன்படி கடந்த 2011 ஆம் ஆண்டு திருப்பதியில் இருந்து திருநின்றவூர் வரை இருபுறமும் சாலை அபிவிருத்திக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்காக இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டன. ஆனால், இன்று வரை சாலை அபிவிருத்த பணிகள் துரிதமாக நடைபெறாமல் மெத்தனமாக நடைபெற்று வருகின்றன. மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அரசு கணக்குகளில், வருவாய் கணக்குகளில் முறையாக சேர்க்கப்படாததால், பல இடங்களில் சம்பந்தப்பட்ட நிலங்கள் தற்போது வரை ஏற்கனவே உள்ள உரிமையாளர்களின் பயன்பாட்டிலேயே இருந்து வருகின்றன.
இதன்காரணமாக சம்பந்தப்பட்ட நபர்களில் சிலர், ஏற்கனவே சாலை விரிவாக்கத்திற்காக கைப்பற்றப்பட்ட நிலங்களை மீண்டும் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனால் நிலம் கையகப்படுத்தப்பட்டு அது பிரயோஜனம் இல்லாமல் பல்வேறு சட்ட சிக்கல்களுக்கும், மோதல்களுக்கும் வழிவகுத்துள்ளது.
எனவே திருப்பதியில் இருந்து திருநின்றவூர் வரை நிலம் எடுக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி முறையாக ஆய்வு செய்து தங்களிடம் உள்ள சர்வே அதிகாரிகளைக் கொண்டு நிலத்தை அளந்து தங்கள் வருவாய் கணக்குகளில் கொண்டு செல்ல வேண்டும். அப்படி செய்யாதபட்சத்தில் அந்த நிலங்களை மீண்டும் பதிவுத்துறை அலுவலகத்தில் மறுபதிவு செய்து முறைகேடாக விற்பனை நடைபெறவும், போலி பத்திர பதிவுகள் நடைபெறவும் தமிழக அரசும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எனவே இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பற்றி களஆய்வு நடத்தி அவற்றை அரசு கணக்கில் கொண்டுவருவதோடு, சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிப்பதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பு. மக்களின் எதிர்ப்பார்ப்பை மாவட்ட ஆட்சியர் பூர்த்தி செய்வாரா? அல்லது மௌனமாக கடந்து செல்வாரா? என்று பொறுத்திருந்துத்தான் பார்க்க வேண்டும்.