தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் - பால் பாய்ஸ்களாக களமிறங்கிய கோவில்பட்டி சிறுவர்கள்! சென்னையில் நடைபெற்று வரும் 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் ஹாக்கி விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வீரர்கள் பால் பாய்ஸ்களாக இயங்கி வருகின்றனர். இதன் மூலம் தங்களது ஹாக்கிவிளையாட்டு திறனை மேம்படுத்துவது அவர்களது நோக்கமாகும்.வளர்ந்து வரும் இந்த வீரர்களின் வயது 8 முதல் 10-க்குள் இருக்கும். தமிழகத்துக்கும், தேசத்துக்கும் பல ஹாக்கி வீரர்களை உருவாக்கி தந்த மண் கோவில்பட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடருக்காக சுமார் 14 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எளிய பின்புலத்தை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களது பெற்றோர்களில் பெரும்பாலானோர் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்கூடங்களில் பணியாற்றி வருகின்றனர்.