விளாத்திகுளம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததால் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு : விபூதியால் நெற்றியில் பட்டை - நாமம் போட்டு நூதனப்போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட துரைராஜ் நகர் பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், போதுமான தெரு விளக்கு மற்றும் குடிநீர் வசதி எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாததால், அப்பகுதி மக்கள் கடந்த 4 ஆண்டுகளாக வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைவரிடமும் பல முறை கோரிக்கை மனுக்களை அளித்தும், பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் தற்போது வரை அடிப்படை வசதிகள் செய்து தராமல் தொடர்ந்து அதிகாரிகளால் அப்பகுதி மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் துரைராஜ் நகரைச் சேர்ந்த மக்கள் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும்,
தேர்தலில் எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை, அரசியல் கட்சியினர் நுழைய அனுமதியில்லை என்றும் தேர்தலை புறக்கணித்து பேனர் வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, தங்களது பகுதிக்கு அரசு எதுவும் செய்யாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் விபூதியால் நெற்றியில் பட்டை - நாமம் போட்டுக்கொண்டும், கருப்புக்கொடிகளை ஏந்தியவாறும் நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டு, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.