தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே முன்விரோதம் காரணமாக மாமனாரை லாரியால் ஏற்றி கொடூரமாக கொலை செய்த மருமகன் உட்பட 3 பேர் கைது - போலீசார் விசாரணையில் வெளிவந்த பரபரப்பு தகவல்கள்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விநாயகா நகர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி பாண்டியன என்பவரது மகன் துரைப்பாண்டியன்(47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி மாலை 6 மணியளவில் துரைப்பாண்டியன் எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது குமாரகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி துரைப்பாண்டியன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். மேலும் அவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனமும் முற்றிலும் உருக்குலைந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து தகவல் அறிந்த எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இது தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் கோவில்பட்டி - எட்டயபுரம் செல்லும் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் விபத்து நிகழ்ந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற ஒரு டிப்பர் லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து அந்த லாரியின் உரிமையாளரான எட்டையபுரம் அருகே உள்ள தோள்மலைப்பட்டியை சேர்ந்த நாகராஜ் (43) என்பவரை பிடித்து விசாரித்த போது... லாரியை கயத்தார் அருகே பன்னீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் சிவராம் (21) ஓட்டி சென்றது தெரியவந்ததுள்ளது. பின் உடனடியாக சிவராமை தேடி பன்னீர்குளத்துக்கு போலீசார் சென்ற போது அங்கு சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிய அந்த டிப்பர் லாரி இரத்தக்கரைகளுடன் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டு டிப்பர் லாரியை போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்ததோடு அங்கு மதுபோதையில் இருந்த சிவராமை கைது செய்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொடுத்ததால் டிரைவர் சிவராமையும் போலீசார் எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன...
உயிரிழந்த துரைப்பாண்டியின் சொந்த மருமகன் உடையார் (எ) உதயகுமார் ராஜா என்பவர் போட்டுக் கொடுத்த சதி திட்டப்படி தான் டிப்பர் லாரியால் ஏற்றி துரைப்பாண்டியனை கொலை செய்ததாக டிரைவர் சிவராம் ஒப்புக் கொண்டுள்ளான். இதையடுத்து உடையார் (எ) உதயகுமார் ராஜாவை சுற்றி வளைத்த போலீசார் அவரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில்....
மாமனார் துரைப்பாண்டியன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் அவருக்கு பல பெரிய இடத்தில் இருப்பவர்களிடம் தொடர்பு இருந்ததாகவும், பல கோடிக்கணக்கான பணப்பரிமாற்றம் இருந்ததாகவும், குடும்பத்தினருக்கு தெரியாமல் பல இடங்களில் பணம் கொடுக்கல் - வாங்கல் வைத்திருந்தார் எனவும், இது குறித்து விவரம் கேட்டபோது குடும்பத்துக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறியுள்ளார். தகராறில் மாமனார் தன்னை ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததால் குடும்பத்திற்குள் மனக்கசப்பும், விரோதமும் உருவாகியுள்ளது. இந்த விரோதம் காரணமாக மருமகன் உடையார் (எ) உதயகுமார் ராஜா தனது நண்பர்களான நாகராஜ் மற்றும் சிவராம் ஆகியோர் உதவியுடன் தனது மாமனார் துரைப்பாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டு அதன்படி கடந்த ஏப்ரல் 2-ம் தேதி மாலை 6 மணியளவில் எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டிக்கு பைக்கில் சென்ற அவரது மாமனார் துரைப்பாண்டியனை செல்போனில் தொடர்பு கொண்ட உடையார் (எ) உதயகுமார் ராஜா எந்த இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டு அங்கேயே பைக்கை நிறுத்தும்படி சொல்லியுள்ளார். மருமகனின் பேச்சை நம்பி பைக்கை நிறுத்திய மாமனார் துரைப்பாண்டியன் சில நிமிடங்கள் காத்திருந்துவிட்டு பின்னர் மீண்டும் பைக்கில் சிறிது தூரம் சென்ற போது மருமகன் உதயகுமார் ராஜா தான் திட்டமிட்டபடி டிப்பர் லாரியை வேகமாக துரைப்பாண்டியன் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோத விட்டு கொடூரமாக கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து எட்டயபுரம் காவல் ஆய்வாளர் முருகன் கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக உடையார் (எ) உதயகுமார் ராஜா, சிவராம், நாகராஜ் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். சினிமாவை மிஞ்சிய இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.