விளாத்திகுளம் அருகே 5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!



அவசர உதவிக்கு 108 வாகனம் கூட உரிய நேரத்தில் வர முடியாத சாலையால் பொதுமக்கள் அவதி!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் இருந்து கந்தசாமிபுரம் கிராமத்திற்கு மொத்த தூரம் 15 கிலோமீட்டர் தூரமாகும் ,இதில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாதலாபுரம் கிராமம் வரை நெடுஞ்சாலைதுறை சாலையாகும், மாதலாபுரம் கிராமத்திலிருந்து கந்தசாமிபுரம் கிராமம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் ஊராட்சி ஒன்றிய கிராமப்புறசாலையாகும், இந்த 5 கிலோமீட்டர் சாலை மிகவும் மோசமாக இருப்பதால், இந்த சாலையை பயன்படுத்தும் கந்தசாமிபுரம், P.ஜெகவீரபுரம்,புதுச் சின்னையாபுரம், சேர்வைகாரன்பட்டி, சங்கரப்பநாயக்கன்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் துத்திநத்தம் பெருநாழி, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும்  பள்ளிகல்லூரி வாகனங்கள் அரசு போக்குவரத்து  இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.



மேலும் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரசாத் கூறுகையில்,இந்த மாதலாபுரம் முதல் கந்தசாமிபுரம் வரை 5 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது,இந்த சாலையை கடந்த ஆட்சியில் இருந்த அரசும் தற்போது உள்ள அரசும் சாலையை சீரமைக்கவோ அல்லது புதிய சாலை அமைக்கவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை, இதனால் இந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அடிக்கடி பழுதாகி வருகிறது.



குறிப்பாக 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த சாலையைக் கடக்க 1/2 மணி நேரம் ஆகிறது, ஒரு அவசரத்திற்கு கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும்,108 வாகனம் உரிய நேரத்தில் வர முடியாமலும்,பள்ளி,கல்லூரி வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமலும் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.




அதேபோல் பொதுமக்களுக்கு புதிய பேருந்து கொடுத்து என்ன பயன்? சாலை இங்கே சரி இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர், எனவே தமிழக அரசு சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று  அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.