எட்டயபுரம் அருகே 50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மனைவி மீனா (29), இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆன நிலையில், வேல்முருகன் வெளியூரில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
மீனா தனது தாயான குருவம்மாளிடம் வீரப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார், மீனா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது, இந்த நிலையில் மீனாவுக்கும் அவரது தாயாரான குருவம்மாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் வீட்டிலிருந்து கிளம்பிய மீனா வீரப்பட்டி கிராமம் அருகே உள்ள சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது, பின்னர் பின்னர் தண்ணீரில் தத்தளித்தபடி “ காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் ” என்று மீனா கூச்சலிட்டுள்ளார்.
இதனை அடுத்து அவ்வழியாக வந்த கிராம பொதுமக்கள் உடனடியாக எட்டையாபுரம் காவல்துறைக்கும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து விரைந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் பாதுகாப்பு வலையில் கயிரைக்கட்டி மீனாவை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் மேலே வந்த மீனாவிடம் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் இது போல் இனிமேல் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.