முதல்வர் நிகழ்ச்சியால் எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் : 8km தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிந்தலக்கரையில் திமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இங்கு வாகனங்கள் செல்ல தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாத காரணத்தினால் தூத்துக்குடி - தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 8 கி.மீ தூரத்திற்கு சாலையிலேயே வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் தேர்தல் பரப்புரை கூட்டம் முடிவுற்ற நிலையில் கூட்டத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்களில் அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் தங்களது ஊருக்கு திரும்புவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்தை சரிசெய்ய போதுமான காவலர்கள் இல்லாததால் தற்போது வரை போக்குவரத்து சரி செய்யப்படாமல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதற்கு வழி இன்றி நிற்பதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.