விளாத்திகுளம் அருகே "ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி திருக்கோவில்" ஆடி மாத கொடை விழாவில், அரிவாள் மேல் ஏறி நின்று அருள்வாக்கு கூறிய பூசாரி : ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு...!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி திருக்கோவிலில்,
"ஆடி மாத கொடை விழாவை" முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில், ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டு, மேளதாளங்கள் முழங்க பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேலும் கொடை விழாவை முன்னிட்டு ஸ்ரீ கள்ளழகர் மற்றும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இக்கோவிலின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் "கோவில் பூசாரி அழகர்சாமி அரிவாள் மேல் ஏறி நின்று அருள்வாக்கு கூறும் நிகழ்வு" நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறி அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
குறிப்பாக... இந்நிகழ்வை காண வேண்டும் என்பதற்காக விளாத்திகுளம் பகுதி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பூக்குழி இறங்குதல் மற்றும் அரிவாள் மேல் ஏறி நின்று அருள்வாக்கு கூறும் நிகழ்வினை கண்டு பக்தி பரவசமடைந்து, மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பணசாமியை தரிசனம் செய்து கோவிலில் நடைபெற்ற அறுசுவை அன்னதானத்தில் உணவருந்தி சென்றனர்...