விளாத்திகுளம் அருகே பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு திருக்கோவில் ஆடி மாத கொடை விழா அசைவ அன்னதானத்தில் கலந்து கொண்ட 15000 பக்தர்கள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ திருமாலிருஞ்சோலை,ஸ்ரீ கள்ளழகர், ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோவிலில் ஆடி மாத பௌர்ணமி கொடை விழாவை முன்னிட்டு கள்ளழகர் மற்றும் பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் தீபாதாரணை நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து கோவில் பூசாரியான அழகர்சாமி பூக்குழி இறங்கி அருவாள் மேல் நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்தார்.
கோட்டநத்தம் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திருமாலுருஞ்சோலை,ஸ்ரீ கள்ளழகர், ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்கள் முன்னொரு காலத்தில் மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்ததாகவும்,பின்னர் வழிபாடு செய்ய முடியாமல் இருந்ததாகவும், இந்தநிலையில் கோட்டநத்தம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வருவதாகவும், வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெறுவதும், பௌர்ணமி அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவதும், ஆடி மாதத்தில் கோவில் கொடை நடப்பதும், இங்கு திருக்கோவிலில் வந்து மனதில் வேண்டியது நடந்து விட்டால் பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு அரிசி,ஆடு,சேவல் ஆகியவற்றை நெத்திக்கடனாக செலுத்துவது வழக்கம் என்று கோவிலில் அருள் வாக்கு கூறும் பூசாரியான அழகர்சாமி தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து இன்று பக்தர்களால் நேர்த்திக்கடன் கொடுக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட ஆடுகள்,சேவல்கள் மற்றும்,100-க்கும் மேற்பட்ட அரிசி பைகளால் மகா அன்னதானம் நடைபெற்றது.
இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 15,000 மேற்பட்டோர், கலந்துகொண்டு உணவருந்தி சென்றனர்.
அதனைத்தொடர்ந்து கோவிலில் வைக்கப்பட்டிருந்த முளைப்பாரியை சுற்றி பெண்களின் கும்மியாட்டம் நடைபெற்றது.