ஓட்டப்பிடாரம் அருகே ஆசிரியர் பணியிடை மாற்றத்தை கண்டித்து மாணவர்கள் பெற்றோர்கள் -தர்ணா போராட்டம் - மீண்டும் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்!தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி கிராமத்தில் செயல்பட்டு வரும் தூ.நா.தி.தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த ஜெயபராஜ், பெரிய நத்தம் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி மாணவர்கள் , பெற்றோர்கள் பள்ளியின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து ஆசிரியர் ஜெபராஜ் மீண்டும் அதே பள்ளியில் பணி அமர்த்தப்பட்டுள்ளார். பள்ளிக்கு வந்த ஆசிரியரை மாணவர்கள் ஆரத்தழுவி தங்களது பாசப்பணிப்பினை வெளிப்படுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்ணகிரியில்  தூ.நா.தி.தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 60க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஜெபராஜ் திடீரென பெரிய நத்தம் கிராமத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 9 மாதத்திற்கு முன்பு தான் இந்த பள்ளியில் அவர் ஆசிரியராக சேர்ந்தார். நன்றாக பாடம் எடுப்பதால் அவருடைய பணியிட மாற்றத்தை கண்டித்து அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும், இதனை தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் தங்களுடைய குழந்தைகள் கல்வி பாதிக்கப்படுவதால் இந்த பள்ளியை அரசு பள்ளியாக மாற்றி தர வேண்டும் என்பதனை வலியுறுத்தி பெற்றோர்கள் போராடி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் கோவில்பட்டி கல்வி மாவட்ட தொடக்கப்பள்ளி  அலுவலர் சின்னராஜ், ஓட்டப்பிடாரம் வட்டார கல்வி அலுவலர் மகாலட்சுமி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், மண்டல துணை தாசில்தார் மகாராஜன், மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மீண்டும் பள்ளியில் ஆசிரியர் ஜெபராஜ் நியமிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தை  தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.  இதையடுத்து ஆசிரியர் ஜெபராஜ் பள்ளிக்கு வந்தது மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்குள் சென்றது மட்டுமின்றி தங்களது ஆசிரியரை ஆரத்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்...