விளாத்திகுளம் அருகே மேட்டுப்பட்டியில், பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளமேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்று மேளதாளங்களுடன் 108 பால் குடங்கள் எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி, அக்கிராமத்தில் உள்ள வைப்பாற்றில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து சிறுமிகள் மற்றும் பெண்கள் 108 பால்குடங்கள் எடுத்து கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் ஊர்வலமாக சென்று பின்னர் கோவிலை வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து திருக்கோவிலில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மனுக்குன பால், சந்தனம், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின் நன்கு அலங்கரிக்கப்பட்ட பத்திரகாளியம்மனுக்கு விஷேச தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ வடக்குத்தி மாரியம்மன் ஸ்ரீ முனியசாமி ஸ்ரீ கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


இதில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது நேத்து கடன்களை செலுத்தி மனம் உருகி வழிபட்டனர். மிகவும் சக்தி வாய்ந்த இக்கோவிலில் பால்குடம் எடுத்து வழிப்பட்டால், அனைத்து தீங்குகளும் நீங்கி, சுபகாரியங்கள் மற்றும் குடும்ப நிம்மதி கிடைக்கும் என்ற ஐதீகம் இருப்பதால் ஏராளமானோர் பால்குடம் எடுத்து அம்மனை வேண்டி வணங்கினர். அதுமட்டுமின்றி ஆண்டுக்கொருமுறை நடக்கும் இந்த சித்திரை மாதத் திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவிலான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்து கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவருந்திச் சென்றனர். இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தர்மகர்த்தா விஜயக்குமார் நாடார் மற்றும் ஊர் கணக்குப்பிள்ளை செல்வம் நாடார் உட்பட கோவில் நிர்வாகக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்..