தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமம் கோவில்குமரெட்டியாபுரம். இக்கிராமத்தில் சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் சஷ்டி திருவிழா மற்றும் மாசித் திருவிழாவானது மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மாசி மக உற்சவ திருவிழாவானது கடந்த பிப்ரவரி 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசி மக உற்சவ விழாவை முன்னிட்டு கோவிலில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது. இதனைத்தொடர்ந்து இந்த மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணியளவில் கோவிலின் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பால், தேன், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் மூலவர் பாலசுப்பிரமணியசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் "வெற்றிவேல்... வீரவேல்..." என்ற கோஷங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரானது நான்கு ரதவீதிகளில் வலம் வந்து பின் கோவிலை வந்தடைந்தது. இந்த புகழ்பெற்ற தேர்த்திருவிழாவை காண விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் இத்தேர்த் திருவிழாவை கண்டுகளித்தனர். இந்த கிராமத்தில் நடைபெறும் தேரோட்டம் மற்றும் திருவிழாவிற்கு கோவில்குமரெட்டியாபுரம் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள்பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகள் கட்டி,தட்டைகாட்டு காட்டுப்பாதை வழியாக இந்தக்கோவில் திருவிழாவிற்கு வருவதால் இதை தட்டைக்காட்டு திருவிழா என்று தற்போது வரை அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.