தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாவளக்கம்பட்டி NTPC நிறுவனத்திற்கு சொந்தமாக சோலார் (சூரிய ஒளி மின்சாரம்) அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணி ஆகியவற்றை எல் - டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிக்காக அந்த நிறுவனம் எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களை ஒப்பந்த பணியாளராக அமர்த்தி இருந்தனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக சுமார் 70 பேர் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வந்த நிலையில் திடீரென தொழிலாளர்கள் பணிக்கு வர வேண்டாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. ஒப்பந்தம் பணி தொடர்பாக எல் - டி நிறுவனம் வேறொரு நிறுவனத்திற்கு பணி வழங்கி உள்ளதால், அந்த நிறுவனம் தற்போது பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களை நீக்கிவிட்டு வட மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.
இதனை கண்டித்தும் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் NTPC நிறுவனம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் சோலார் அமைப்பதற்கு நிலங்களை தந்ததாகவும், கடினமாக வேலை பார்த்து சோலார் அமைத்த பின்னர், தங்களை பணி நீக்கம் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பும் ஒப்பந்த பணியாளர்கள் , கஷ்டமான வேலைகளை எங்களிடம் கொடுத்துவிட்டு, எளிய வேலைகளுக்கு நலமாண்ட தொழிலாளர்களை பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கின்றனர்.
இது குறித்து நிர்வாகத்துடன் பேசினால் தற்போது வாங்கும் ஊதியத்தை விட குறைவாக தருகிறோம், விருப்பம் இருந்தால் வேலை பாருங்கள் என்று கூறுவதாகவும், இதனை வேலையை நம்பி தான் தங்கள் குடும்பங்கள் இருப்பதாகவும், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.ஒப்பந்த பணியாளர்களின் போராட்டத்தை தொடர்ந்து எல் - டி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்ப பிரச்சினை குறித்து சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பேசி முடித்து தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.